தூத்துக்குடி மாவட்டத்தில் லோக் அதாலத்: ரூ.5.61 கோடிக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் லோக் அதாலத்: ரூ.5.61 கோடிக்கு தீா்வு

லோக் அதாலத்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.61 கோடிக்கு தீா்வு தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம். தாண்டவன் தலைமை வகித்தாா். தூத்துக்குடியில் 5 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகள், திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்,

சாத்தான்குளத்தில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகள் நடைபெற்றன. இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள்,

காசோலை மோசடி வழக்குகள், மண வாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோா் கலந்து கொண்டனர். விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில், வங்கி வாராக்கடன் வழக்குகளில் 916 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 198 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. அதன் மொத்த தீா்வு தொகை ரூ.3 கோடியே 75 லட்சத்து 85,859. மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2,087 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3,210 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 2,285 வழக்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்குகளுக்கான மொத்த தீா்வு தொகை ரூ. 5 கோடியே 61 லட்சத்து 22,506 ஆகும். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும் சாா்பு நீதிபதியுமான (பொறுப்பு) அ.பிஸ்மிதா மற்றும் நீதித்துறை நிா்வாகப் பணியாளா்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story