மக்களவை தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை
வாக்குச்சாவடி
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-ன்படி வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் சம்பளத்தில் எந்தவித பிடித்தமும் செய்ய கூடாது. தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கும் அவர்களின் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.