சேலத்தில் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்
ஆட்சியர் பிருந்தாதேவி
மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். இதற்கான வேட்பு மனு பரிசீலனை 28-ந் தேதி செய்யப்படும். வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 30-ந் தேதி ஆகும்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுவினை வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிபவர் நேரிலோ அல்லது Suvidha Portal https://suvidha.eci.gov.in என்ற இணைய வழி மூலமாக தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சேலம், மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் 20-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் 27-ந் தேதி வரையில் அரசு விடுமுறை தவிர்த்து பிற நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் கான்வாய் அல்லது அவருடன் வரும் அதிகபட்ச மூன்று வாகனங்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், குறிப்பிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சேலம், மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் வர அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இதர விவரங்களை www.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.