பறக்கும் படையினர் சந்திக்கும் பிரச்சினைகள்
பைல் படம்
தேர்தல் காலத்தில் கருப்புப் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்திடவும், இந் நோக்கத்திற்காக கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்திடவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தினை கண்காணித்திடவும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுகிறது.
வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் இத் தகுதி நிலையில் பணிபுரியும் இதர துறைகளின் அலுவலர்கள் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற முறையில் மூன்று பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமனம் செய்யப்படுகின்றன. வாக்குப் பதிவு நாள் நெருங்கிவரும் போது கூடுதல் குழுக்களும் நியமிக்கப்படும்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அதே சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களின் அலுவலர்களாகவே பெரும்பாலும் நியமிக்கப்படுகின்றனர். நேற்று வரை, அதாவது தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை அந்த சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களிடம் அலுவல் முறையில் தொடர்பில் இருந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் தேர்தல் அறிவித்த பிறகு மேற்காணும் பிரமுகர்களின் வாகனங்களை சோதனை செய்வதில் தயக்கமும், சங்கடமும் இருக்கும்.
தேர்தல் முடிந்த பிறகு அலுவல் முறையில் மீண்டும் அவர்களையே சந்திக்க வேண்டிய நிலையில், சில வாகனங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பறக்கும் படை பணியின்போது முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை சோதனை செய்தால் தேர்தலுக்கு பிறகு அலுவலக பணிக்கு நெருக்கடிகள் வரக்கூடும் என்ற அச்சத்தில் சில அலுவலர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், 8 மணி நேரம் பறக்கும் படையில், நிலையான கண்காணிப்பு குழுவில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக பணிபுரிவது அலுவலர்களுக்கு உடல் சோர்வினை தந்து விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி நடுநிலையுடன் திறம்பட செயல்பட கீழ்க்காணும் நடவடிக்கைகளை, முடிவுகளை தேர்தல் ஆணையம் எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு சட்டமன்ற தொகுக்குட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களை அதே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்களாக நியமித்திட கூடாது. வேறு சட்டமன்ற தொகுதிக்கு, அந்த அலுவலர்கள் இதுவரை பணிபுரியாத தொகுதிக்கு, பகுதிகளுக்கு பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலராக நியமித்திட வேண்டும். 8 மணி நேரப் பணியினை 6 மணி நேரமாக குறைத்து சுழற்சி முறையில் 4 குழுக்களை நியமித்திட வேண்டும்.
தேர்தல் அறிவிப்பிலிருந்து வாக்கு பதிவு நாள் வரை தொடர்ந்து ஒரே அலுவலரை, குறிப்பிட்ட அலுவலர்களை பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர்களாக பணிபுரிய வைப்பதை தவிர்த்து 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அலுவலர்களை மாற்றம் செய்து புதிய அலுவலர்களை நியமித்திட வேண்டும். பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பழிவாங்கும் பணியிட மாறுதல்கள், அச்சுறுத்தல்கள் நிகழாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளனர்.