நூல் மூட்டை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
விபத்து
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் புறநகர் பகுதியில், சேலத்திலிருந்து கொச்சின் வரை செல்லும் நான்கு வழிச்சாலை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில், தற்பொழுது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தனியார் நூற்பாலைக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, எதிர்பாராத விதமாக அதிகபாரம் காரணமாக கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் போக்குவரத்து வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்கு நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர், உடனடியாக ஜேசிபி இயந்திரம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் மூட்டைகளையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பஞ்சு மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் அதிவேகமாகவும், செல்போன் பேசியபடியும் வந்ததாலேயே, இந்த லாரி விபத்து ஏற்பட்டு, கவிழ்த்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். லாரி கவிழ்ந்ததும் ஓட்டுநர் அப்படியே லாரி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.