சீட்டு நடத்தி பல கோடி மோசடி - ஆட்சியரிடம் பெண்கள் புகார்

சீட்டு நடத்தி பல கோடி மோசடி - ஆட்சியரிடம் பெண்கள் புகார்

மனு அளிக்க வந்த பெண்கள் 

இருங்காட்டுக்கோட்டையில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏலசீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் ஜெகதீசன் என்பவரின் மனைவி காமாட்சியும் அவர்களின் மகளான மோனிகா ஆகியோர் பண்டு சீட்டு மற்றும் ஏலச் சீட்டுகளை கடந்த 15வருடங்களாக நடத்தி வந்துள்ளனர். கடந்த 15வருடங்களாக சீட்டு நடத்தி வருவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் பெயரில் ரூ.1லட்சம், ரூ.2லட்சம், ரூ.5லட்சம் என 20மாத தவணை முறையிலினான ஏலச்சீட்டு மற்றும் மாத, தங்க நகை சீட்டு உள்ளிட்டவைகளில் பணத்தை மாதா மாதம் தவணை முறையில் கட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிய காலத்தில் சீட்டு பணம் வழங்காத காரணத்தால் அவர்கள் ஏலச்சீட்டு நடத்தியவர்களை பலமுறை அணுகி பணத்தை தரும்படி கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது தருகிறோம், அப்பொழுது தருகிறோம் என கூறி தொடர்ந்து அலைக்கழித்து ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் பணத்திற்காக அவர்கள் வழங்கிய வங்கி காசோலையும் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பி விட்டது.

இதனால் இவர்களின் மீது நம்பிக்கை இழந்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பணத்தை மீட்டுத் தர கோரி கடந்த ஆண்டு 2023 மே மாதம் 16ந் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் சீட்டு பணம் மோசடி குறித்து புகார் அளித்து,தங்களது பணத்தை மீட்டுத் தர கோரி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மனு மீது குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு சீட்டு நடத்திய காமாட்சியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு மூன்று மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த அறிவுறுத்தியதன் பேரில் காமாட்சியும் பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் மூன்று மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது ஐந்து மாதங்களை கடந்தும் காமாட்சி சீட்டு பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வருகைப் புரிந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் தங்களது பணத்தை உடனடியாக மீட்டுத் தரக்கோரி கோரிக்கை மனுவை அளித்தனர். சுமார் 15வருடங்களாக அப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்று ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து பல கோடி ரூபாய் வரை சீட்டு பணம் மோசடி நடந்தேறியுள்ள சம்பவம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story