மெட்ராஸ் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒப்பந்தம்
மெட்ராஸ் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒப்பந்தம்
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் டி.எம்.பி.பவுண்டேசன் பல்வேறு சமுதாயநலப் பணிகளை செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக 22.03.2024 அன்று ஐ.ஐ.டி.மெட்ராஸ் நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கிட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஐ.ஐ.டி.மெட்ராஸ் நிறுவனத்தின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதி உதவி ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர்.மனுசந்தானம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை தலைமை அதிகாரியும் டி.எம்.பி.பவுண்டேசன் நிர்வாக அறங்காவலருமான எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த விழாவில், நூற்றாண்டுகள் பழமையான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் டி.எம்.பி.பவுண்டேசனுடன் இணைந்து செயல்படுவதை டாக்டர்.மனுசந்தானம் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். டி.எம்.பி.பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் எஸ்.கிருஷ்ணன் விழாவில் பேசுகையில், "டி.எம்.பி.பவுண்டேசன் கடந்த சில ஆண்டுகளாக இளநிலை கலைக்கல்வி பட்டப்படிப்புகளுக்கு உதவி வருவது போல் ஐ.ஐ.டி.மெட்ராஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக 30 மாணவர்களுக்கு 2 பிரிவுகளாக உதவித்தொகை வழங்கப்படும். முதலாவதாக மாணவரின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.1லட்சம் முதல் 5 லட்சம் வரை இருப்போருக்கு அரசு வழங்கும் கட்டணம் போக மீதமுள்ள கட்டணத்தை டி.எம்.பி.பவுண்டேசன் ஏற்கும். 2வது கட்டமாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு 50 சதவிகிதம் அதாவது உதவித்தொகையாக ரூ.1 லட்சம் மட்டும் வழங்கப்படும்.
அதன் அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் வரை முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் ஆய்வகம், ஆராய்ச்சி மையம் மற்றும் இதர தேவைகளுக்கும் வருங்காலத்தில் உதவி செய்ய தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி. மெட்ராஸ் துணைத்தலைவர் வசுதா, ராஜேஷ், டி.எம்.பி. பவுண்டேசன் மூத்த நிர்வாக அதிகாரி செந்தில் ஆனந்தன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சென்னை மண்டல மேலாளர் வசீகரன், அடையாறு கிளை மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.