மதுரை : நாள்தோறும் விழிப்புணர்வு வழங்கும் சமூக ஆர்வலர்
சமூக ஆர்வலர் இல.அமுதன்
மதுரை வீதிகளில் சமூக ஆர்வலர் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை அறிவிப்புச் செய்து வருகிறார். கரோனா தொற்று காலத்தில் தொடங்கிய இந்த சேவை இன்றளவும் தொடர்கிறது.
இது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அன்றாட விலைவாசி உயர்வால் பொருளாதாரச் சுமை, உடல்நலக் குறைபாடுகளால் நிச்சயமற்ற இயந்திர வாழ்க்கைக்கு இடையே மற்றவர்களை பற்றி சிந்திக்க கூட நேரமின்றி மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், எந்தவித ஆதாய நோக்கமும் இன்றி, குடும்ப நலனைத் தாண்டி சமூக நலனுக்காக களத்தில் இறங்கிப் பணி செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகையவர்களில் ஒருவர் மதுரை பேச்சியம்மன் படித்துறை கீழ அண்ணா தோப்பு தெருவைச் சேர்ந்த இல.அமுதன் (65).
இவர் தொற்று நோய், மழை, புயல், வெயில் என எது வந்தாலும் ஒவ்வொரு நாளும் மதுரை நகர வீதிகளில் ஒலிபெருக்கியுடன் நடந்து சென்று மக்களுக்கு விழிப்புணர்வு தகவல்களை அறிவித்து வருகிறார். தொடக்கத்தில் ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்தம் பெற்றுத் தருவது, ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவது, ஆதரவற்றோர் இறந்தால் இறுதிச் சடங்கு செய்வது போன்ற சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்து வந்தார்.
'கரோனா'வுக்குப் பிறகு, முழு நேரமாக ஒலிபெருக்கியுடன் மதுரை நகர் வீதிகளில் நடந்து சென்று, அந்தந்த வாரங்களில் நடக்கும் முக்கிய மக்கள் நல முகாம்கள், சுகாதார விழிப்புணர்வுத் தகவல்களைச் சொல்லி வருகிறார். 'கரோனா' காலத்தில் தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. ஆனால், மக்கள் தடுப்பூசி போடத் தயங்கினர். அந்த வேளையில், அமுதன், பஜாரில் ஒலிப்பெருக்கி வாங்கி கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்பிறகு வாக்காளர் அட்டை முகாம், ரத்த தான முகாம் நடக்கும் இடங்கள், மின்தடை நடக்கும் இடங்களை முந்தைய நாளே அறிவித்து வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுத் தகவல்களை ஒலிபெருக்கி மூலம் பரப்பி வருகிறார்.