மதுரை விமான நிலைய விவகாரம் - ஆர்.டி.ஐ தகவல்
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 633 ஏக்கரில் இதுவரை 543 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட பின்பே விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் தொடங்கும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதுரை விமான நிலைய இயக்குனரகம் பதிலளித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு சென்னை, பெங்களூரு, டெல்லி, உள்ளிட்ட இடங்களுக்கு 15 உள்நாட்டு விமானங்களும், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 3 சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இதில் 1000த்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கோவை, திருச்சியை காட்டிலும் அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கையாளும் விமான நிலையமாக இருந்து வரும் நிலையில் இதுவரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படாமல் இருப்பது தென் மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்வதற்காக திட்டமிடப்பட்டு சுமார் 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியானது கடந்து 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 543 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மீதமுள்ள 89 ஏக்கர் நிலம் என்பது நீர்நிலை பகுதியாக இருப்பதால் இதுவரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவையுடன் விமான நிலையம் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக அதுவும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில்களை அளித்தார்களோ அதே பதிலை தான் தற்போதும் விமான நிலைய இயக்குனரகம் அளித்துள்ளார்கள். எனவே தென் மாவட்டங்களின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.