மதுரையையும் விஜய்காந்தையும் எப்போதும் பிரிக்க முடியாது

மதுரையையும் விஜய்காந்தையும் எப்போதும் பிரிக்க முடியாது

 மதுரையையும், விஜய்காந்தையும் எப்போதும் பிரிக்க முடியாது என அவரின் நெருங்கிய நண்பர் ராமு கூறியுள்ளார்.  

மதுரையையும், விஜய்காந்தையும் எப்போதும் பிரிக்க முடியாது என அவரின் நெருங்கிய நண்பர் ராமு கூறியுள்ளார்.

மதுரையையும், விஜய்காந்தையும் எப்போதும் பிரிக்க முடியாது என அவரது நெருங்கிய நண்பராக கேஷியர் ராமு உருக்கமாக அனுபவம் பகிர்ந்தார். மதுரையில் பிறந்து வளர்ந்து, திரைப்படத்துறைக்கு செல்வதற்கு முன்பு மதுரையில் விஜய்காந்துடன் பழகியவர்கள் பலர் இருந்தாலும், அவருடன் நெருங்கிப் பழகி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் மதுரை ராமு (எ) கேஷியர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன், ஊமச்சிகுளம் மோகன், வீரப்பத்திரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் கேஷியர் ராமு 1986-ல் விஜய்காந்த் ஆண்டாள் - அழகர் என்ற பெயரில் எண்டர்பிரைசஸ் மதுரை பூங்கார சந்தில் தொடங்கியது முதல் உடன் இருந்தவர். விஜயகாந்த் குறித்து நினைவலையைப் பகிர்ந்தராமு கூறுகையில், 'மதுரை அவரது சினிமா கம்பெனி அலுவலகம் தொடங்கியது மூலம் அவர் நடித்த 'கரிமேடு கருவாயன்' திரைப்படத்தை வாங்கி தென் மாவட்ட திரையரங்குகளில் வெளியிட்டார். அன்று முதல் அவருடன் பயணிக்கிறேன்.

அவருடன் இணைந்து ரைஸ்மில் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். மதுரையில் அவர் தொடர்பான நிர்வாகத்தை கவனிக்கிறேன். அவர் அரசியல் கட்சி தொடங்கினாலும், அங்கு செல்லவில்லை. கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியான பிறகு அவரை கேப்டன் என்றே என்னை போன்றவர்கள் அழைப்போம். மதுரையின் வளர்ச்சிகள் குறித்து அடிக்கடி பேசுவார். மீனாட்சி கோயிலுக்கு தேவையான வசதிகளை செய்யவேண்டும் எனச் சொல்வார். மதுரையில் யாராவது உதவிகேட்டால் உடனே அவரது கவனத்திற்கு கொண்டு வரச் சொல்வார். அவர் நடித்த கேப்டன் பிரபாகரன், கரிமேடு கருவாயன், ஊமை விழிகள், சின்னக் கவுண்டர் உள்ளிட்ட சில படங்களை அவ்வப்போது சொல்லி பெருமைப்படுவார். தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்கள், கடலூர் மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் மன்றம் அதிகமாகவே வளர்ந்தன. இதன் காரணமாகவே அவர் மதுரையில் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மதுரையையும், விஜய்காந்தையும் ஒரு வகையில் பிரிக்க முடியாது. திரைப்பட உலகில் அவரை மதுரைக்காரராகவே பார்க்கப்பட்டார். மனித நேயமிக்கவர்.

யார் என்ன உதவி கேட்டாலும் உடனே முன் வந்து உதவிடுவார். கடந்த 6 மாதம் முன்பு சென்னைக்கு சென்று அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்தேன்.அவரை அந்த நிலையில் பார்த்தபோது, வேதனையாகவே இருந்தது. அவரது இழப்பு அவருடன் தொடர்ந்து பயணித்த என்னை போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்று மறைந்த நடிகர் விஜயகாந்த் நண்பர் கேஷியர் ராமு தெரிவித்தார்.

Tags

Next Story