மதுரை நகர கூட்டுறவு வங்கி: பணப்பலன்களை வழங்க கோரிக்கை மனு
மதுரை நகர கூட்டுறவு வங்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் பணப்பலன்களை வழங்க கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை புது நாயக்கர் தெருவில் உள்ள மதுரை நகர கூட்டுறவு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகர கூட்டுறவு வங்கி பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மூடப்பட்டது. அந்த வங்கியில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்டோருக்கு தற்போது வரை வழங்க வேண்டிய சம்பளம், பணிக் கொடை, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு பண பலனையும் வழங்காமல், உள்ளனர். இதனைக் கண்டித்து, மதுரை நகர கூட்டுறவு வங்கியில் 1996 முதல் 2005 வரை வேலை பார்த்து வந்த 10-க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றனர்.
குறிப்பாக, அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள், மதுரை நகர கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து 1996 முதல் 07.01.2005 வரை வேலை பார்த்து வந்தோம். 07,01.2005 முதல் வங்கி கலைக்கப்பட்டு விட்டதால், சுமார் 20 வருடங்களாக கலைத்தல் அலுவலர் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நிர்வாகித்து வருகின்றனர். நாங்கள் வங்கி கலைப்பதற்கு முன்னர், ஜூலை 2003முதல் நவம்பர் 2004 வரை வேலை பார்த்த சம்பள தொகையை நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்க மறுக்கிறார்கள்.
அதேபோல, எங்களது பணிக்கொடை தொகை இன்ஸீரன்ஸ் நிறுவனம் மதுரை நகர கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தி ஒராண்டு ஆகியும், இன்னும் தர மறுக்கிறார்கள்.வேறு வேலை வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எங்கள் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சொல்லியும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. ஆனால், 20 வருடங்களாக இந்த அதிகாரிகள் இந்த வங்கியில் சம்பளம் பெறுகின்றனர். ஆகவே, எங்களுக்கு சம்பளம், கிராஜுவிட்டி தொகை மற்றும் மாற்றுப்பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.