திருமங்கலம்: அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்

திருமங்கலம்: அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்
மதுரை கலெக்டர்
திருமங்கலம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த ஆட்சியர், சுகாதாரத்தில் அலட்சியம் என அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார்.

திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வந்து செல்வதால் நாள்தோறும் 10,000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் மழை பெய்தால் கழிவுநீர் மழை நீரோடு சேர்ந்து பேருந்து நிலையம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சியளித்து வந்தது . இதனால் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீரென திருமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். திடீரென ஆய்வு மேற்கொண்டதால் நகராட்சி அதிகாரிகள் இடையே பதட்டமான சூழ்நிலை உருவானது. பேருந்து நிலையம் வந்த ஆட்சியர் சங்கீதா கழிவுநீர் கால்வாய்களை ஆய்வு செய்தார் தொடர்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது கடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டு அதிகாரிகளிடம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் கால்வாய்களையும் உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் அங்கிருந்த பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறைக்கு சென்ற போது துர்நாற்றம் வீசவே கழிப்பறைக்கு சென்று வந்த பெண்களிடம் விசாரித்த போது உள்ளே சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் பயன்படுத்துவதற்கு டப்பா கூட இல்லை ஆனால் ஐந்து ரூபாய் கட்டணத்திற்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள் என குற்றச்சாட்டு வைத்தனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரை அழைத்து கேட்டபோது உள்ளே சுகாதாரமான நிலை இருப்பதாக ஒப்பந்ததாரர் தெரிவிக்கவே கோபமடைந்த ஆட்சியர் சங்கீதா உள்ளே சுத்தமாக இருந்தால் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு உள்ளே போய் பார்க்கவா? என ஒப்பந்ததாரிடம் கேட்டபோது மௌனமாக இருந்தார்.

அதை எடுத்து ஆட்சியர் நகராட்சி அதிகாரிகளும் கட்டண கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள் என கூறிவிட்டு அருகில் இருந்த இலவச கழிப்பறை உள்ள பகுதிகளை ஆய்வு செய்தபோது இலவச கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லாததை கண்டு நகராட்சி அதிகாரிகளை கண்டித்தார்.

இலவச கழிப்பறை ஏன் பயன்பாட்டில் இல்லை ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா என பொதுமக்கள் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் அனைத்தையும் நாளைக்குள் அப்புறப்படுத்த வேண்டும் இலவச கழிப்பறையை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டு சென்றார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீரென பேருந்து நிலையப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட சம்பவம் பேருந்து நிலையப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story