ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து செய்யப்படுமா...? - அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து செய்யப்படுமா...? - அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஓட்டுநர் உரிமத்தில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கார் விபத்தில் சிக்கியதற்காக, டிரைவிங் லைசென்சை காவல்துறையினர் பறிமுதல் செய்ய முடியாது என்ற நீதிமன்றம்

விபத்து தொடர்பான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்குள் ஓட்டுநர் லைசென்சை போலீசார் ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அச்சுறுத்தும் வகையில் ரேஸ் வைத்து வாகனம் ஓட்டுவோர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோர், அலட்சியமாக வாகனம் ஓட்டி மோசமான விபத்து ஏற்படுத்துவோரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. இதில் விபத்துகளை பொருத்து 3 - 6 மாதங்கள் வரை லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.

விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமம் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவர்களின் லைசென்ஸ் கண்டிப்பாக ரத்து செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான நாகராஜன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”நான் சங்கரன்கோவிலில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக நான் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இறந்துவிட்டார். இதுகுறித்து என் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அதன்பேரில் எனது டிரைவிங் லைசென்சை 6 மாதத்துக்கு ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். என் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே எனது டிரைவிங் லைசென்சை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதித்து, எனக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் நாகராஜன் கூறியிருந்தார்.

அந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, 'கார் விபத்தில் சிக்கியதற்காக, டிரைவிங் லைசென்சை காவல்துறையினர் பறிமுதல் செய்ய முடியாதுஎன இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும் மனுதாரர் மீதான வழக்கில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்குள் அவரது லைசென்சை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்ய அதிகாரம் இல்லை. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே மனுதாரரிடம் ஒருவாரத்தில் அவரது லைசென்சை திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

Tags

Next Story