மாட்டுத்தாவணிக்கு மாறும் மதுரை வெங்காய மார்க்கெட்
மதுரையில் 100 ஆண்டுகளாக செயல்பட்ட பழமையான மதுரை கீழமாரட் வீதி வெங்காயம் மார்க்கெட், மாட்டுத் தாவணி அருகே இடமாறுகிறது.
மதுரையில் 100 ஆண்டுகளாக செயல்பட்ட பழமையான மதுரை கீழமாரட் வீதி வெங்காயம் மார்க்கெட், மாட்டுத் தாவணி அருகே இடமாறுகிறது.
இதற்காக மாட்டுத் தாவணியில் ரூ.10.30 கோடியில் வெங்காயம் மார்க்கெட் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்ட மதுரை மாநகரத்தில் அனைத்து வர்த்தகமும், கோயிலை சுற்றியுள்ள வீதிகளிலே செயல்பட்டது. சிம்மக்கல் பழ மார்க்கெட், பழைய சென்டரல் மார்க்கெட், கீழ மாரட் வெங்காயம் மார்க்கெட், மாசி வீதி வெங்காயம் மார்க்கெட் போன்றவை, இரவு, பகலாக செயல்பட்டன. மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வருகையால், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகள், நள்ளிரவும் இயங்கும். அதனாலே, மதுரை மாநகரம் தூங்கா நகரம் என பெயரெடுத்தது. இந்நிலையில், காலப் போக்கில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து அதிகரிப்பால் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவே மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
வர்த்தக நிறுனங்கள், மார்க்கெட்டுகளுக்கும் சரக்கு வாகனங்கள் பொருட்களை போக்குவரத்து நெரிசலை தாண்டி கொண்டு வர முடியவில்லை. அதனால், படிப்படியாக கோயிலை சுற்றியுள்ள ஒவ்வொரு மார்க்கெட்டும், புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த அடிப்படையில் தற்போது கீழ மாரட் வீதி வெங்காயம் மார்க்கெட், மாட்டுத் தாவணி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
கீழ மாரட் வீதியும், அதில் அமைந்துள்ள வெங்காயம் மார்க்கெட் பாரம்பரியமானது. 100 ஆண்டுகளுக்கு மேலாக கீழ மாரட் வீதியில் ஒரே இடத்தில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 110 கடைகள் உள்ளன. தேனி, வருசநாடு, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகின்றன. பெரிய வெங்காயம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றன. ஒரு நாளைக்கு 200 டன் சின்ன வெங்காயம், 200 டன் பெரிய வெங்காயம் வருகிறது. இந்த மார்க்கெட்டின் சிறப்பு என்னவென்றால் சில்லறையாவும், மொத்த விலைக்கும் வெங்காயம் வாங்கி செல்லலாம். வெங்காயமும் தரமாகவும், விலை நியாயமாகவும் விற்கப்படும். அதனால், பொதுமக்கள், வியாபாரிகள் இந்த மார்க்கெட்டிற்கு வெங்காயம் வாங்க குவிவார்கள். முன்பு, அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த மார்க்கெட் செயல்பட்டது.
நாள் அடைவில் இந்த நேரம் படிப்படியாக குறைந்து தற்போது அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அதன் பிறகு சில்லறை வியாபாரம் மட்டுமே நடக்கிறது. மொத்தம் 1,000 தொழிலாளர்கள்இந்த மார்க்கெட்டில் பணிபுரிகிறார்கள். இந்த மார்க்கெட்டை ஆரம்பத்தில் இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன் பிறகு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவும் வியாபாரிகள் மார்க்கெட் இடமாற்றம் செய்வதற்கு ஒத்துக் கொண்டனர். வெங்காயம் வணிகர் சங்க தலைவர் சி.முகம்மது இஸ்மாயில், "நகரின் மையத்தில் இந்த மார்க்கெட் அமைந்துள்ளதால் இதுவரை மக்கள், வியாரிகள் எளிதாக வந்து வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இரவு முழுவதும் போக்குவரத்து வசதி உள்ளதால் தொலைதூரத்தில் இருந்தும் மக்கள் வீடுகளுக்கு தேவையான வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள்.
புறநகர் செல்லும் போது வியாபாரிகள், பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் எங்கள் மார்க்கெட்டில் வெங்காயங்களை விலைக்கு தகுந்தார்போல் கொட்டி வைத்திருப்பார்கள். அவற்றில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வெங்காயத்தை பார்த்து வாங்கலாம். இந்த அமைப்பு, பொதுமக்களுக்கு வசதியாக இருக்கிறது. பொதுமக்களே சாதாரணமாக 5 கிலோ, 10 கிலோ வாங்கி செல்வார்கள். இந்த சிறப்பு வேறு எந்த மார்க்கெட்டிலும் யாரும் கிடையாது. மாட்டுத் தாவணிக்கு போக முடியாது என்றுதான் சொன்னோம். 100 ஆண்டுகள் பழமையான மார்க்கெட்டை விட்டு செல்ல தற்போதும் உடன் படவில்லை. அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று இடம் மாட்டுத்தாவணியில் தருவதாக உறுதியளித்ததால் வேறு வழியில்லாமல் செல்கிறோம்" என்றார்.