சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவனை அலேக்காக தூக்கிய போலீசார்
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கம் நொளம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது குறித்து மதுரவாயல் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது பிரபல வழிப்பறி கொள்ளையன் ரகுமான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த ரகுமானை மதுரவாயல் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது குறிப்பாக தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு தனியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வது மற்றும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களை பறித்து செல்வது, வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் திருடப்படும் மோட்டார் சைக்கிள் குறைந்த விலைக்கு போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கிராமப்புற பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.தன்னுடன் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டால் போலீசிடம் சிக்கிக் கொள்வோம் என்பதற்காக கூட்டாளிகளை சேர்த்துக் கொள்ளாமல் ரகுமான் தனியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரகுமான் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்கள் உள்ள நிலையில் வழிப்பறியில் கிடைத்த பணத்தை வைத்து உல்லாசமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் அங்கு கையில் உள்ள பணம் தீர்ந்து விட்டால், அந்தப் பகுதிகளிலும் வழிப்பறியில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெங்களூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரகுமானை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆறு மோட்டார் சைக்கிள்கள் ஐந்து செல்போன்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.