பாலகணபதி ஆலய திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, பெருங்குடி வட்டம், கடையக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு பாலகணபதி ஆலய திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, யாத்திரா தானம், மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாதாரனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் இன்று நடைபெற்றன.
இந்த யாக பூஜையில் பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரானது கலசங்களில் நிரப்பி, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து கருட பகவான் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒத, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர கோபுர கலசத்தில் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பால கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.