தஞ்சை பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா

தஞ்சை  பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.

இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, சனிக்கிழமை காலை 5 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக, பிரதோஷத்தையொட்டி, மகா நந்திகேஸ்வரருக்கு வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள்: மகா சிவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலையொட்டி உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம், நாத சங்கமம், பட்டி மன்றம், பக்தி இன்னிசை, தப்பாட்டம், கரகாட்டம், காளியாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் என சனிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவுக்காக கோயில் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

Tags

Next Story