மகாகாளியம்மன் கோவில் தீமிதி விழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் எதிரே உள்ள மணிமண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கரகம் எடுத்து வந்த பூசாரி தீ குழியில் இறங்க , அடுத்தடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எலுமிச்சை பழங்களை வானில் வீசி இரண்டு மணி நேரம் இடைவிடாது தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.