ஊட்டியில் மகாவீர் ஜெயந்தி !
மகாவீர் ஜெயந்தி
அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச் செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்குப் போதித்தவர் வர்த்தமான மகாவீர்.
தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் ஜெயந்தியை விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடினர்.
ஊட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள ஜெயின் கோவிலில் நேற்று காலையில் வடமாநிலத்தினர் திரண்டனர். அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வடமாநில பக்தர்கள் விழாவை கொண்டாடும் விதத்தில் ஊர்வலம் சென்றனர்.
பஸ் நிலையம் தொடங்கி மெயின் பஜார், அப்பர் பஜார், சென்று ஊர்வலம் மீண்டும் ஜெயின் கோவிலை வந்து அடைந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு திரளாக கலந்து கொண்டு பேரணியாக நடந்து சென்றனர்.
ஊர்வலம் இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
இதில் அகிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது போன்ற மகாவீர் அறிவுறுத்திய சமத்துவ கொள்கையை தெரியப்படுத்தும் வகையில் ஊர்வலம் செல்கிறோம். உலக அமைதிக்காவும் ஊர்வலம் நடத்தப்பட்டது," என்றனர்.
பேரணியையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக நேற்று ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் தீர்த்தங்கரர்களைப் போல் அலங்காரம் செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர்.
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தது.