நீலகிரியை சர்வதேச சுற்றுலாத் தலமாக உருவாக்குவேன் - எல். முருகன்
எல்.முருகன் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளராக போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காலை அன்னூரில் பிரசார பயணத்தை தொடங்கி, சிறுமுகை நால்ரோடு சந்திப்பு, காரமடை, மேட்டுப்பாளையம், கோத்தகிரி மற்றும் குன்னூர் வழியாக ஊட்டி வந்தார். அப்போது ஒவ்வொரு இடத்திலும் மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்தும் தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து இறுதி கட்டமாக ஊட்டி ஏ.டி.சி., சந்திப்பில் அவர் பேசியதாவது: மிகச்சிறந்த இடமான நீலகிரி 75 ஆண்டுகளாக வளர்ச்சி அடையவில்லை. எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும். நீலகிரியில் மருத்துவ பயிர்கள் விவசாயம் ஊக்குவிக்கப்படும். நீலகிரி மீண்டும் சிறந்த படப்பிடிப்பு தளமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை இங்கேயே முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாட்டை வல்லரசு தேசமாக மாற்ற பிரதமர் மோடி எல்லா முயற்சியும் செய்து வருகிறார்.
நீலகிரி மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது பிரதமர் நரேந்திர மோடி. தற்போது உள்ள சூழ்நிலையில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார். . படுகர் இன மக்கள் பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்பட்டது. நீலகிரியில் தனியாக மகளிர் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் நான்கு வழி புறவழிச்சாலை அமைக்கப்படும்.
கூடலூர் செக்சன் 17 பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். வேளாண் பொருள்களை நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, பவானிசாகர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வரப்படும். நீலகிரியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்றுவது தான் முதல் வேலை ஆகும். நீலகிரியில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் இங்குள்ள பொதுமக்கள் வேலைக்காக வெளியூர் செல்வது தவிர்க்கப்படும். மோடிஜியா?2ஜியா? என்று முடிவு செய்யுங்கள். தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் பேசினார்.