மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறை விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பாலதொட்டனப்பள்ளி, அகலக்கோட்டை. கண்டகாணப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் மூன்று காட்டு யானைகள் சுற்றித்திரிந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த மூன்று காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி கிராமம் அருகே சாவரபத்ரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் உணவு தேடி சுற்றித்திரிந்துள்ளது.

அப்போது அங்கிருந்த ஒரு பள்ளத்தில் மூன்று காட்டு யானைகளும் கீழே இறங்கியுள்ளன. இதில் ஒரு காட்டு யானையின் மீது அந்த வழியாக தாழ்வாக சென்ற மின்சார ஒயர்கள் உரசி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கி காட்டு யானை சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தது ஆண் காட்டு யானை என்பதும், சுமார் 40 வயது மதிக்கத்தக்கது எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் இதேபோல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி என்ற கிராமத்தில் ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார ஒயர்களை பிடித்த காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story