சேலத்தில் செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியவர் கைது
சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின் போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனை மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கி சென்றுள்ளார். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனுடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார்.
அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள சபீர் வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் சபீரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.