தஞ்சாவூரில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் கைது
தஞ்சாவூரில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் கைது
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் முள்ளுக்காரத் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை மீன் பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சாவூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில், டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அந்த வீட்டில் 1.3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், ' இதுதொடர்பாக கீழவாசல் முள்ளுக்காரத் தெருவைச் சேர்ந்த ல.செல்வம் (34) என்பவரை கைது செய்தனர்.