ரயில் நிலையத்தில் ஆண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பலியானவர்
சேலம் ஜங்ஷனில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெயிலில் பயணம் செய்ய 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு 1-வது பிளாட்பாரம் சென்றார். அப்போது அந்த நபர் திடீரென்று மயங்கிய நிலையில் கீழே விழுந்தார். இதனை அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக ரெயில்வே மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை செய்தனர். இதில் மயங்கிய நிலையில் கிடந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து அவர் யார் எதற்காக வந்தார் என்பது குறித்து அவர் சட்டை பாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருவள்ளுவர் மாவட்டத்திற்கு செல்வதற்காக எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட், ஆதார் கார்டு, யூடியூப் சேனலில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை மற்றும் செல்போன், ரூ.9 ஆயிரத்து 500 பணம் , தங்கம், வெள்ளி மோதிரங்கள், கைக்கடிகாரம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆதார் கார்டை ஆய்வு செய்தபோது இறந்த நபர் திருவள்ளூர் மாவட்டம், ஏகத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பிரேம்குமார் (52) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.