நீரோடை கழிவுகளை அகற்ற நிர்வாகத்தினர் நடவடிக்கை !

நீரோடை கழிவுகளை அகற்ற நிர்வாகத்தினர் நடவடிக்கை !

கழிவு

ஊட்டி- மஞ்சூர் சாலை வனப்பகுதியில் நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதற்கு முன்னரே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடந்தது. அதன் பின்னர் 2 ஆண்டுகளாக மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டது. தற்போது கோடை சீஸன் தொடங்கியுள்ள நிலையில் தினசரி ஊட்டிக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி- கூடலூர் சாலை, ஊட்டி- மஞ்சூர் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் பிளாஸ்டிக் பொருட்களை வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் நாப்கின் உள்பட பிளாஸ்டிக் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் தண்ணீரில் மிதந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களுடன் வருகின்றனர். இதை தடுக்க கல்லாறு, பர்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. தீவிர கண்காணிப்பு இல்லாத நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. நாட்டில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட யுனெஸ்கோவின் உயிர்கோள காப்பகம் நீலகிரி தான். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழத்தோல் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை வீசினால் கூட பரவாயில்லை. மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வனப்பகுதியில் வீசுவது வனவிலங்குகளுக்கு பெரும் ஆபத்தாகவும் சவாலாகவும் உள்ளது. சீஸன் தற்போது தான் தொடங்கியுள்ளது. இப்போதே பிளாஸ்டிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் நீலகிரி வனச்சூழலை பாதுகாக்கலாம். அதேபோல் லவ்டேல் பகுதியில் வனப்பகுதி நீரோடையில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story