நெல் இலை சுருட்டுப் புழு மேலாண்மை
நெல் இலை சுருட்டுப் புழு
நெல் இலை சுருட்டுப் புழு மேலாண்மை திருவண்ணாமலை வட்டாரத்தில் தச்சம்பட்டு பகுதியில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. தொடர்ச்சியான மழை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூழ்நிலை இலைச் சுருட்டுப் புழு தாக்குதலுக்கு உகந்த காரணமாக உள்ளது. முட்டையிலிருந்து வெளிவரும் புழு உமிழ்நீரின் உதவியோடு இலையின் இரு ஓரங்களையும் இணைத்து அதன் உள்ளே இருந்து கொண்டு இலையின் பச்சையத்தை சுரண்டி சாப்பிடுவதனால் இலைகள் வெள்ளை நிற தாள்களாக மாறும்.
தற்போது நடப்பட்ட இளம் பயிராக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஓரளவுக்கு நன்கு வளர்ந்த பயிராக இருந்தால் முறையான கட்டுபாட்டு முறைகளை மேற்கொள்ளும் போது மகசூல் இழப்பை தவிர்த்துவிடலாம். நெற்பயிருக்கு தேவைக்கு அதிகமான யூரியா போன்ற தழைச்சத்தை வழங்கும் போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். எனவே வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் அளவினைவிட அதிகமாக தழைச்சத்து உரங்களை நெற்பயிருக்கு இடாமல் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
அதே போல் கார்போப்யூரான் அல்லது போரேட் ஆகிய குருணை வடிவ பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் சைப்பர்மித்திரின் போன்ற பைரித்திராய்டு மருந்துகள் தெளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேற்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இலை சுருட்டுப்புழு எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொண்டுள்ளதோடு அவைகள் தெளிப்பதனால் இப்புழுக்கள் பல்கி பெருக வாய்ப்புள்ளது. எனவே இம்மருந்துகளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டு முறைகள் 1. வயல் வரப்புகளை புல் வகையிலான களைச் செடிகள் இன்றி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
2. கூடுதலாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். 3. பறவைகள் வந்து அமர்ந்து தாய் அந்துப் பூச்சி மற்றும் புழுக்களை பிடிப்பதற்கு ஏதுவாக ஹெக்டருக்கு 40 முதல் 50 தென்னையின் அடி மட்டைகளை வயலில் ஆங்காங்கே ஊன்றி வைக்க வேண்டும். 4. வயலில் 10 சதவிதத்துக்கும் மேற்பட்ட தூர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கதிர் பிடிக்கும் பருவத்தில் 5 மூ இலைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது பின்வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து இலைச் சுருட்டுப் புழுவில் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
குயினல்ப்பாஸ் 25 EC 1000 மிலிஃ ஹெக்டர் டைகுளோர்வாஸ் 76 WSC- 250 மிலி ஹெக்டர் பாஸ்போமிடான் 40 SL- 600 மிலி ஃ ஹெக்டர் குளோர்பேரிபாஸ் 20 EC- 1250 மிலிஃஹெக்டர் கார்பரில் தூள் 50 WP- 1 கிலோஃ ஹெக்டர் புரபனோபாஸ் 50 EC - 1000 மிலிஃ ஹெக்டர் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு ஹெக்டருக்கு குறிப்பிட்டுள்ள அளவினை தேவையான(250 லி) அளவு நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என திருவண்ணாமலை வட்டார வேளாண்மை அலுவலர் அவர்கள் தெரிவிக்கிறார்.