தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டி; மூன்று பேர் காயம்
தேவகோட்டை அருகே தாணிச்சாஊரணியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மூன்று பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தாணிச்சாஊரணியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகளும், காளைகளை அடக்க 117 காளையர்களும் களமிறங்கினர். போட்டியில் வட்ட வடிவிலான திடலின் நடுவே வடத்தில் கட்டப்பட்டிருக்கும் மாட்டினை 9 பேர் கொண்ட குழுவினர் 25 நிமிடங்களில் அடக்க வேண்டும். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் காளையர்கள் போராடி மாடுகளை அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.
அப்போது 4வதாக களம் இறங்கிய காளையை வீரர்கள் அடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வடக்கயிறு அறுந்து காளைமாடு நாலாபுரமும் ஓடி மேடையில் மீது பாய்ந்து அங்கிருந்து நிர்வாகிகளை முட்டி தள்ளி வெளியேறியது. இதில் பார்வையாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். இதனால் வடமாடு நிகழ்ச்சியை காண வந்த பார்வையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இச்ச சம்பவத்தால் போட்டி சுமார் அரை மணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக வடக்கயிறு கொண்டு வரப்பட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்றது