கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள துவார் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளிலிங்கம் திருக்கோயில் அபிஷேக ஆராதனை விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. முன்னதாக கிராமத்தார்கள் கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு, அங்கிருந்து மேளதாளத்துடன் ஆளவட்டத்தோடு புறப்பட்டு மஞ்சுவிரட்டு தொழு வந்தடைந்தனர்.

அங்கு தொழு வழிபாட்டுக்கு பிறகு முதலாவதாக ஊர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தொழுவில் இருந்து வெளியேறிய காளைகளை அடக்க முற்பட்டனர்.

இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பல வீரர்களை பந்தாடியது. சில காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கினர். பிடிப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும் கிராமத்தின் சார்பாக சில்வர் பாத்திரம், துண்டுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் கட்டுமாடுகளாக வயல்வெளிகளில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமுற்றனர்.

Tags

Next Story