உலக சுந்தரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா
மண்டல பூஜை
சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மிக பழமையான அருள்மிகு ஸ்ரீ உலக சுந்தரி அம்மன் திருக்கோவிலில் மண்டல பூஜை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
புராண சிறப்புமிக்க இக்கோவிலில் பிரதான சன்னதியில் உலக சுந்தரி அம்மன் சுற்றுப்புற பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கன்னிமார் அம்மன், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி, ஸ்ரீ கருப்பையா சுவாமி, ஸ்ரீ பைரவர் சுவாமி, ஸ்ரீ புராதன அழகு சுந்தரி அம்மன், ஸ்ரீ ஆதி அழகு சுந்தரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் தனித்தனி விமானங்கள் கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.
சமீபத்தில் இக்கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றது. அடுத்து மண்டல பூஜை சிறப்பு யாக பூஜையுடன் நடந்தன. முன்னதாக அம்மன் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து கோமங்கள் நடைபெற்று அம்மனின் மூல மந்திரங்கள் கூறி பூர்ணாகுதி அளிக்கப்பட்டன. பின்னர் தீப ஆராதனை காண்பித்து கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் அழகு சுந்தரி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
பின்னர் அம்மனுக்கு புது வண்ண பட்டு சேலை அணிவித்து, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏகமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உலக சுந்தரி அம்மனை வழிபட்டனர்.