வெள்ளியணையில் மண்டல அபிஷேக விழா
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் குடிகொண்டு அருளாசி வழங்கி வரும் ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மாதம் நான்காம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்களாக மண்டல அபிஷேக விழா தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பலரும் பங்கேற்று இந்த மண்டல அபிஷேக விழாவை தொடர்ந்து நாள்தோறும் நடத்தி வந்தனர். நேற்று மண்டல அபிஷேக தின விழா நிறைவு நாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று கோவிலுக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக கொங்கு சமுதாயத்தில் நடைபெறும் பாரம்பரியமிக்க வள்ளிக்குமி நடனம் மற்றும் கொங்கு ஒயிலாட்டம், கொங்கு நடன குழுவால் நடத்தப்பட்டது.
கொங்கு நடன குழுவினர் ஈசன் முருகன், விநாயகர், மற்றும் அவர்களது குலதெய்வங்களின் சிறப்புகளை விவரித்து அவர்களது புகழ் பாடும் வகையில் பக்தி பாடல்களை பாடினர். இந்த நடன குழுவில் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்- சிறுமியர், இளைஞர்,இளம்பெண்கள், மற்றும் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் பங்கேற்று தங்கள் சமுதாய நிகழ்ச்சியான வள்ளி கும்மி நடனத்தில் பங்கேற்று இசைக் கலைஞர்கள் இசைத்த இசைக்கேற்றவாறு நடன அசைவுகளை அமைத்து நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.