15 அடி பள்ளத்தில் பசுமைவீடு கட்ட ஆணை - பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021 நிதியாண்டில் 24-12-2020 அன்று பழங்குடியின வகுப்பினருக்கு கடலாடி கிராம ஊராட்சியில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், பசுமை வீடு கட்டுவதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் 15 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் அள்ளப்பட்டுள்ளது. அதள பாதாளமாக காட்சியளிக்கும் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழை பாமர மக்களுக்கு அரசாங்கம் வீடு கொடுக்கும் நிலையில், அரசு அதிகாரிகள் அவர்களை வஞ்சிப்பது ஏன்? என பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. 15 அடிக்கு மேல் உள்ள பள்ளத்தில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக அதிகாரிகள் கூறுவதாகவும், அந்தப் பள்ளத்தை நிரப்ப லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் மட்டுமே முடியும் என்றும் பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி மற்றும் பி.டி. ஓ முருகன் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என்று புலம்பும் பழங்குடியின மக்கள், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.