இடைக்கழிநாடு பகுதியில் மாம்பழம் விற்பனை அமோகம்
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பகுதியில் மாம்பழம் விற்பனை அமோகமாக உள்ளது.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பகுதியில் மாம்பழம் விற்பனை அமோகமாக உள்ளது.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மா, பலா மற்றும் அதன் சார்ந்த தொழில்களில், பெரும்பாலான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடைக்கழிநாடு சுற்றுவட்டார பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், மாமர தோப்புகள் உள்ளன. இங்கு, பங்கனபள்ளி, அல்போன்சா, செந்துாரா, நீலம், ருமானியா மற்றும் ஒட்டு ரக மாங்காய் என, பல்வேறு விதமான மா வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் மாம்பழங்கள், தோட்டங்களில் சில்லறையாகவும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு, மொத்தமாக லாரிகள் வாயிலாகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாமரத்தில் பூப்பிடிக்கும் நேரத்தில், கடந்த ஜன., மாதம் பெய்த திடீர் மழையின் காரணமாக, பூ மற்றும் பிஞ்சுகள் அதிகளவில் உதிர்ந்தன. இதனால், மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டது. தற்போது, மாம்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், தோட்டத்தில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்பட்டு, சில்லறை வியாபாரத்தில், 1 கிலோ பங்கனபள்ளி 70 - 100 ரூபாய், 1 கிலோ செந்துாரா 70 - 100, 1 கிலோ ஒட்டுரக மாம்பழம் 50 - 70 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசாயனம் இன்றி, தோட்டத்தில் இருந்து நேரடியாக பழுத்த பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்வதால், கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்வோர், சாலை ஓரத்தில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை வாங்கிச் செல்ல விருப்பம் காட்டுகின்றனர்.
Next Story