லூர்தம்மாள் சைமனுக்கு மணிமண்டபம் - சபாநாயகர் அப்பாவு
கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடிப்பவர் நல சங்கத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் முழு உருவ சிலை திறப்பு விழா நேற்று மாலை குளச்சல் மரியன்னை தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடந்தது. சங்க தலைவர் வர்கீஸ் தலைமை வகித்தார். லூர்தம்மாள் சைமன் முழு உருவச் சிலையை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜான் ரூபஸ் சிலையை அர்ச்சித்தார். அமைச்சர் மா சுப்பிரமணியம் சங்க 50வது ஆண்டு பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் கல்வெட்டை திறந்து, புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தை திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கடந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் வசந்த் எம் பி, மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கடலில் மூழ்கிய விசைப்படகு சங்க நிதி ரூ. 31.50 லட்சம் நிவாரணமாக வழங்கி சபாநாயகர் பேசியதாவது:- இந்த அரசிடம் நீங்கள் கேட்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். லூர்தம்மாள் சைமனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார். இந்த விழாவில் ராஜேஷ் குமார் எம் எல் ஏ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.