மரக்காணம் : பக்கிங்காம் கால்வாய் முகத்துவார மணல்மேடுகள் அகற்றம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வங்கக்கடலில் உண்டான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதுபோல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரானது கால்வாயில் அருகில் உள்ள உப்பளங்களில் புகுந்து விட்டது. இதனால் உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.இதேபோல் பக்கிங்காம் கால்வாயில் உண்டான வெள்ள நீரானது கால்வாயின் அருகில் உள்ள அனைத்து கிராம விவசாய நிலங்களிலும் புகுந்து விவசாயம் பாதிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகத்துவாரத்தை திறந்து விட்டால் மட்டுமே பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் இருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து முகத்துவாரத்தை திறந்து விட ஏற்பாடு செய்தனர் இதனைத் தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், செங்கல்பட்டு மாவட்ட திட்ட அலுவலர் தியாகராஜன், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு, சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் முருகன், விஏஓ பிரபாகரன், கிராம உதவியாளர்கள் வெங்கடேசன், நாகராஜன் மற்றும் இரண்டு மாவட்டங்களை சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பக்கிங்காம் கால்வாய்க்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் இடையில் இருந்த சுமார் 100 மீட்டர் மணல்மேடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி கால்வாய் அமைத்து விட்டனர் இதனைத் தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் உள்ள வெள்ள நீரானது கரை புரண்டு வங்க கடலில் கலக்கிறது இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஒட்டிய பகுதியில் உடனடியாக வெள்ளப்பெருக்கு குறையும் என அதிகாரிகள் கூறினர் .
Next Story