மார்கழி திருவிழா

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று தொடங்கியது.
இந்த விழாவுக்கு, பாரம்பரிய முறைப்படி கொடி பட்டம் கோட்டார் பட்டாரியர் சமுதாயத்தின் சார்பில் வழங்கப்படுவது வழக்கம். அதேபோன்று இந்த வருடத்திற்கான கொடி பட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கோவிலின் ரத வீதிகளில் கொண்டுவரப்பட்டு பூஜைகளுடன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஒன்றாம் திருவிழாவான இன்று காலை மாணிக்கவாசகர் பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 5 நாட்கள் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் 20- ம் தேதி மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியில் மருங்கூர், குமாரகோயில், கோட்டார் போன்ற பகுதிகளிலிருந்து விநாயகர், முருகன் சுவாமிகள் வந்து மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 22- ம் தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சி நடைபெறும்.
24 ஆம் தேதி இரவு கைலாசப்பர்வத தரிசனம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சி நடைபெறும். 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.