மாரியம்மன் கோவில் தேர் திருவிழா!
தேர் திருவிழா
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியின் காவல் தெய்வமாக ஊட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டு இருப்பதால், பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 36 நாட்கள் நடக்கும் தேர் திருவிழா பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 18ம் தேதி முதல் இந்த மாதம் 12ம் தேதி வரை ஒவ்வொரு சமுதாய சங்கங்கள் சார்பில் ஆதிபராசக்தி, துர்க்கை, காமாட்சியம்மன், கருமாரியம்மன், மாளிகைபுரத்து அம்மன், பவானி அம்மன், ராஜகாளி, பட்டத்தரசி அம்மன், ஹெத்தை அம்மன், அங்காளம்மன் தெய்வங்களின் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து கடந்த வாரம் தையல் நாயகி, மகாமாரி, பகவதி ஆகிய தெய்வங்கள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து 12ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், பூஜைகள் செய்யப்பட்டு தேர் கலசம் பொருத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு விநாயகர், மாரியம்மன் உள்பட எழுந்தருளி தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1.55 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்., லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்பட முக்கிய சாலைகள் வழியாக வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு கல் உப்புகளை தூவி வழிபட்டனர். தேருக்கு முன்பாக விநாயகர், ஆதிபராசக்தி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெய்வங்களின் சிறுத் தேர்கள் சென்றன. தேரோட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து ஊட்டியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. மேலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல இடங்களில் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) வெள்ளைக் குதிரையில் நீலாம்பிகை பவனி வருதல் மஞ்சள் நீராட்டு கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை விடையாற்றி உற்சவம் மற்றும் உள் பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Next Story