அணைக்கட்டு அருகே தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா
அணைக்கட்டு அருகே தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா
ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு கிராமத்தில் தேசத்து மாரியம்மன் சிரசுத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10-ம் தேதி தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா நடைபெற்று வருகிறது. குடியாத்தம் நகரத்தில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவிற்கு அடுத்தபடியாக அதி விமர்சையாக நடைபெறும் திருவிழா இந்த தேசத்து மாரியம்மன் சிரசு திருவிழா. அதன்படி, ஆசனாம்பட்டில் சுமார் 200 வருடத்திற்கு முன் எழுந்தருளியுள்ள உலக மக்களை காக்கும் தேசத்து மாரியம்மன் கோயிலில் 133-ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்று தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது. அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டி கொண்டனர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு சிறப்பு செய்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்று வருகிறது. இதில், ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story