ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி : அமைச்சர் வழங்கினார்

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி : அமைச்சர் வழங்கினார்

ஏழை பெண்களுக்கு திருமண நீதியுதவி வழங்கிய அமைச்சர்

கோவில்பட்டியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இரண்டாவது கட்டமாக 120 ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயமும் திருமண நிதியுதவிகளையும் இன்று (28.01.2024) வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈ.வே.ரா. மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் ஆகிய நான்கு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 2019-2023 ஆண்டு வரை உள்ள பெண்களுக்கான நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 24.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக 300 ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக 120 ஏழைப்பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் இதில் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 வீதம் 80 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம் மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.25000 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000 மற்றும் 1 பவுன் தங்க நாணயம், கல்லூரி படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50000 மற்றும் 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தினை விரைவில் விரிவுப்படுத்த உள்ளார்கள். மாணவிகள் உயர்கல்வி பயின்றால் அறிவாற்றல் மிக்க சமுதாயம் உருவாகும். ஏனென்றால் வருங்காலத்தில் தங்களது குழந்தைகளுக்கும் கல்வியைக் கற்றுக்கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டமும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்த உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நல்லாட்சி செய்து வருகிறார்கள். அதேபோல் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய முதல் ஆண்டில் 2.11 லட்சம் பெண்கள்; பயன்பெற்றுள்ளார்கள். இதில் 11922 பேர் இடைநிற்றல் நின்றவர்கள் தற்போது கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த ஆண்டு 2.30 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளார்கள். தமிழ் சமுதாயம் முன்னேற பெண்கள் கல்வி பயில வேண்டும். பெண்கள் வெளியூர்களில் வேலைக்கு சென்றால் நவீன வசதிகளுடன் அரசு மகளிர் தங்கும் விடுதிகள் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு குறைந்தவட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மழையினால் 4500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, புதிய வீடு கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதியோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி இடுக்கன் களைவோம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த இணையதளத்தில் கோரிக்கைகளை பதிவேற்றம் செய்யும்பட்சத்தில் தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள், பெரு நிறுவனங்கள் மூலமாக அவர்களது குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்மொழி வளர்ச்சி அடைய வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார். முன்னதாக கோவில்பட்டி இராமசுவாமிதாஸ் பூங்கா அருகில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியியில் முதல் 10 இடம் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், தேசிய அளவில் நடைபெற்ற மிதிவண்டி சாம்பியன் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காகவும், தற்போது நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 2 தங்கப்பதக்கமும், 1 வெள்ளி பதக்கமும் பெற்ற ஜெ.ஸ்ரீமதி அவர்களுக்கு சாதனையாளர் விருதினையும், உலக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மீத்திறள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காயத்ரி அவர்களுக்கு சாதனையாளர் விருதினையும் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்துவதற்கு உதவி புரிந்த 17 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கமாரியம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story