ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம் !
போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு இரட்டை கரை கால்வாய் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை செப்பனிட கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழை நடும் போராட்டம், கண்டன முழக்க போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருந்தும் இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மூன்றாம் கட்ட போராட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் சேது தலைமை வகித்தார். வட்டாரக்குழு உறுப்பினர் ராஜூ முன்னிலை வகித்து போராட்டத்தை துவக்கி பேசினார். மற்றும் ஏராளமானவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மீண்டும் இந்த வேலையை தாமதப்படுத்தினால் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது உடனடியாக டெண்டர் விடப்பட்டு டெண்டர் முடிந்தவுடன் பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் தரப்பில் மேற்படி சாலையை தரமானதாக போட வேண்டும், விரைவில் பணிகள் முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது இரணியல் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.