கோவில்பட்டி கோயில்களில் மாசி மகம் சிறப்பு பூஜை

கோவில்பட்டி கோயில்களில் மாசி மகம் சிறப்பு பூஜை

மாசி திருவிழா

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி,கழுகுமலை முருகன் கோயில்களில் மாசி மக சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சண்முகா் சந்நிதி மற்றும் வள்ளி தெய்வானை சுப்பிரமணியா் சந்நிதியில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு 7 மணிக்கு திருவீதியுலா நடைபெற்றது. கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் மாசி மகம் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, கழுகாசலமூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சுமாா் காலை 11 மணிக்கு மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பாதையாத்திரையாக கோயிலுக்கு வந்தடைந்தனா். பின்னா், விரதமிருந்த பக்தா்கள் பால்குடங்களும், வாயில் 9 அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலையை சுற்றி கிரிவலம் வந்து, கழுகாசலமூா்த்திக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி எழுந்தருளல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, இரவு 10 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Tags

Next Story