மாசி பாரி வேட்டை உற்சவ விழா

ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் 18-ம் படி கருப்பர் சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு எலுமிச்ச மாலை வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பாக அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து பக்தர்கள் கரும்புத்தொட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, கும்மியடித்தல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டனர். பின்னர் கோவில் பூசாரி கருப்பர் வேடம் அணிந்து கையில் சாட்டை எடுத்து சாமியாட்டம் ஆடியபடி கோவிலை சுற்றி வலம் வந்தனர். உடன் பக்தர்களும் பக்தி கோஷங்களுடன் சாமியாட்டம் ஆடியபடி சுவாமியை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கருப்புசாமிக்கு பூஜை செய்த எலுமிச்சைப்பழம் பூமாலைகள் எழுமிடப்பட்டன. இதில் பக்தர்கள் குழந்தை வரவேண்டி எலுமிச்சை பழத்தை திருமண தடை நீங்க வேண்டியும், புத்திர பாக்கியம் பெற வேண்டியும் ரூபாய் 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து எலுமிச்சம் பழம் மற்றும் பூ மாலைகள் பெற்று சென்றனர். விழாவை முன்னிட்டு சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
