ஸ்ரீபிரத்யேங்கரா தேவி கோயிலில் மாசி பவுர்ணமி சிறப்பு பூஜை
ஓசூர் அருகே ஸ்ரீபிரத்யேங்கரா தேவி கோயிலில் நடந்த மாசி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஓசூர் அடுத்துள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் இன்று மாசி மாத பௌர்ணமி திருநாள் மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல மூலவரான ஸ்ரீபிரத்யேங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மங்கள ஆரத்தியும் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து கோயிலில் சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இந்த யாகத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று யாகத்தில் மிளகாய் வத்தலை போட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த சிறப்பு பூஜைகள் மற்றும் யாகத்தில் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
Next Story