ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்

ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டம் 

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசித் தேரோட்ட விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மனின் அன்னையாகவும் தெற்கிலிருந்து தன் கடைக்கண் அருள் பார்வை கிழக்கில் உள்ள தன் மகளான சமயபுரம் மாரியம்மன் நோக்கி தான் ஆதி மாரியம்மன் காட்சி பெறுகிறார்.

தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதா தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 11 ம் தேதி பூச்சொறிதல் விழா தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெற்று வந்தது.அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி மாசித் தேர்த் திருவிழா தொடங்கியது.

இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், யானை, ரிஷபம், உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வான மாசி தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாதாரனை நடைபெற்றது. பின்னர் அம்மன் தேரில் ஏறி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர்.

கூட்டம் மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்,குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story