பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச்.9 ல் தூய்மைப்பணி - ஆட்சியர் உத்தரவு
ஆய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்த்தில் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மார்ச் 4ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் விபரம் குறித்து ஒவ்வொரு ஊராட்சி வாரியாக ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, கோடை காலம் வர உள்ளதால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் எந்த இடர்பாடும் இருக்கக் கூடாது. ஊராட்சி ஒன்றியம் வாரியாக பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்களை 1 வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மார்ச் 9ம் தேதி அன்று நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக கிராமப்பகுதிகிளல் ஆய்வின்போது, கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் தண்ணீர் தேங்கியிருக்கும் சூழல் காணப்பட்டால் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.