உருது பள்ளி விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

உருது பள்ளி விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

மயில்சாமி அண்ணாதுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் அரசு உருது மேல்நிலைப்பள்ளி 16 ஆண்டுகள் முடிந்து 17வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சி கையருகே நிலா தலைப்பில் நடைப்பெற்றது. இந்த விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். இதனை ஒட்டி பள்ளியின் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த, விங்ஸ் எனப்படும் சிறகை விரி சிகரம் தொடு என்ற விழா மலரை, மாணவ, மாணவிகள் மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், விண்வெளி மனிதன் மற்றும் விஞ்ஞானிகள் போன்று வேடம் அணிந்து வந்து வழங்கினார்கள். விழா மலரை டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர் மனசு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட அனைவரும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சீனாவை பின்தள்ளி, அடுத்த 40 வருடங்களில், மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அவர்களது முதுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா என்ன செய்கிறது என்று உற்று நோக்கி வருகிறார்கள். இந்தியா மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து சாதித்து வரும் என பெருமிதம் கூறினார்.

Tags

Next Story