தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சரிடம் கோாிக்கை!
அமைச்சரிடம் மனு அளித்த சங்கத்தினர்
4 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தடை செய்யப்பட்ட சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை சரிந்து, பண்டல்கள் குடோன்களில் தேங்கி, தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு 2 நாள் முதல் 4 நாள் வரை மட்டுமே வேலை என்று அபாய கட்டத்துக்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள், வேலுார் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டிணம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 லட்சம் தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
தீப்பெட்டி தொழில் 1923ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் நிலையில், 100 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இந்தியாவில் 80 சதவீதம் சந்தையையும், பன்னாட்டு சந்தையில் 40 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு ரூ. 600 கோடி அன்னிய செலவாணியையும் நாட்டுக்கு ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது. இப்படி பாரம்பரியமான தீப்பெட்டி தொழிலுக்கு சீனாவிலிருந்து வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் விற்பனை பாதித்து, தொழில் நலிவடைந்து வருகிறது. இது தீப்பெட்டி உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கத் துவங்கிவிட்டது.
தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட் வேலை என்பது ஒரு ஷிப்ட்டாக மாறிவிட்டது. இப்போது, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைவது அதிகரித்துவிட்டது. ஜி.எஸ்.டி வரி, டோல்கேட் கட்டண உயர்வு, லாரி கட்டணம் உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்று ஏகத்துக்கும் எல்லா பகுதிகளிலும் விலை உயர்ந்து விட்டது. இப்படி தீப்பெட்டி தொழில் செய்ய முடியாத நிலைக்கு காரணம் ரூ.20க்கு கீழ் விற்பனை செய்யப்படும் சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பார்வையிட்ட போது, சீனா சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், ரூ. 20க்கு கீழ் சீனா சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை தாண்டி இப்போது, சீனா சிகரெட் லைட்டர்கள் நோபாளம் வழியாக கடத்தி வரப்பட்டு, முன்பை விட ரூ. 10க்கு கீழ் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தீப்பெட்டி விற்பனை அடியோடு பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இப்போது வாரத்தில் ஒரு ஷிப்ட் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு 2 நாள் முதல் 4 நாள் வரை மட்டுமே வேலை கிடைக்கிறது. அதுவும், கோயில் திருவிழா, கல்யாண வீடு என்று தொழிற்சாலைகளுக்கு லீவு விடுவதற்கு உற்பத்தியாளர்கள் காரணம் தேடும் நிலைக்கு உள்ளாகி விட்டனர்.
அதுபோல், 40 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ஒரு ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது, 2 குச்சிகளாக குறைத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் பெண் தொழிலாளர்களைக் கொண்ட தீப்பெட்டி தொழில் அவர்களை கைவிட்டு வருகிறது. தொழிலாளர்கள் மாற்று தொழிலை தேட துவங்கிவிட்டனர். இப்போது, லட்சத்தீவில் ரூ. 20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழகத்திலும் தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில், செயலாளர் சேதுரத்தினம், சங்க நிர்வாகிகள் எத்திராஜ், ராஜராஜன், தொழிலதிபர் திலகரத்தினம், மாவட்ட திமுக பிரதிநிதி மாாிச்சாமி, உள்ளிட்டோர் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உடனிருந்தார். அப்போது, சட்டசபை கூடும் நேரத்தில், முதல்வர் ஸ்டாலினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் வலியுறுத்தினர். துாத்துக்குடி மாவட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் கீதாஜீவன், ‘கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு செயலர்களை சந்திக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.