மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்து பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற்ற, 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களின் சமூகப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு வட்டாட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட பெயர் பட்டியலின் அடிப்படையில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்திடும் வகையில், மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

காது,மூக்கு,தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் காதொலி கருவி, சக்கர நாற்கலி என மொத்தம் 06 பயனாளிகளுக்கு ரூ.22,650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் வழங்கினார். மேலும் காதொலி கருவி வேண்டி 5 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 1 நபரும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனுவை வழங்கியதை தொடர்ந்து, மனு கொடுத்த அனைவருக்கும் அடுத்த 10 நிமிடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், மருத்துவர்கள் அறிவழகன். சிவக்குமார் அசோக், பிரவீன் பாபு, கமலக்கண்ணன் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story