மருத்துவ முகாம்
தஞ்சாவூர் அருங்காட்சியகம் வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமை வருவாய் கோட்டாட்சியர் துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் அருங்காட்சியகம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தொடங்கி வைத்தார். இம்முகாமில், இரத்த முழு பரிசோதனை, பல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், இருதய நோய் மருத்துவம், பொது மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டது. மேலும், இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இம்முகாமில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கார்த்திக்ராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.