தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான பன்னோக்கு உயர்தர பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 43 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து, சிறப்பு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமை, மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நடத்தப்பட்டது.
இம்முகாமினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இம்மருத்துவ முகாமில் இருதய மருத்துவம், நுரையீரல் மருத்துவம், கண், பல் மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், இயன்முறை மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், வாழ்க்கை நடைமுறை மாற்ற நலவாழ்வு மையம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம், பாத பரிசோதனை மையம் உள்ளிட்ட மருத்துவ பிரிவுகளும், ஹீமோகுளோபின், இரத்த வகை கண்டறிதல், இரத்தச் சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த நிறமி, யூரியா, கிரியாட்டினின், எச்.ஐ.வி, சளி மாதிரி பரிசோதனை, இசிஜி ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் 250 தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் ஆசோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் 43 தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களால் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாப்பழம், வாழைப்பழம், நெல்லிக்காய், ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய "நலவாழ்வு பைகள்” முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.
மது மற்றும் புகை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் புகையிலை உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி தலைமையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர். முகாமில், மண்டலகுழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
