பைக் மீது அரசு பஸ் மோதல் : மருந்து விற்பனை பிரதிநிதி பலி
விபத்து
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சின்னராஜா மகன் அன்பு ஆனந்த் (22). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மெடிக்கல் நிறுவனத்தில் விற்பனை முகவராக பணிபுரிந்து வருகிறார். இன்று பணியில் இருந்த ஆனந்த் மருத்துவரை சந்திப்பதற்காக தனது பைக்கில் ஜெயராஜ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவரது பைக் மீது மோதியது. இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த அன்பு ஆனந்தின் உடல் மீது பேருந்தின் பின் டயர் ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் சுமார் அரை மணி நேரம் கழித்து 108 வாகனம் வந்து அவரை சோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக அவரது உடலை ஏற்றாமல் சென்று விட்டனர். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தியபாகம் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மிக அருகே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. மருத்துவமனை அருகில் விபத்து நடந்தும் வாலிபரை காப்பாற்ற முடியாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.